தியாகதுருகம் அருகே உள்ள திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது சாலையின் இருபுறமும் உள்ள நிலத்தின் விவசாயிகள் இங்கு பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் பாலம் அமைய உள்ள இடத்தை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் குறிப்பிட்ட இடத்தில் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
previous post
next post