தியாகதுருகம்
தியாகதுருகம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சங்கர், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். இதில் மாணவர்களுக்கு வீடுகள் தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மஞ்சப்பை பயன்படுத்துவது ஆகிய தலைப்புகளில் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் வீராசாமி தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் நகரங்களின் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.